ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலம் மூடல்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் முக்கிய கோயில்கள், காவிரிக்கு பொதுமக்கள் வர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.;
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்தது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுவதற்கு மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் உள்ள முக்கிய கோயில்கள், காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தற்போது ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி முக்கொம்பு மூடப்பட்டது. சுற்றுலா தளத்தில் அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அங்கும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் இந்த தடை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக திருச்சி முக்கொம்பு நுழைவு வாயிலில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, மறு அறிப்பு வரும் வரை தற்காலிகமாக பார்வையாளர்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் முக்கொம்புவிற்கு வந்த ஏராளமானவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.