தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டிய பிரதமர் மோடி
தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகளுக்காக அவரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.;
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி பாராட்டியிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி எப்போதுமே நல்ல செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதிலும் அதற்கு நன்றி தெரிவிப்பதிலும் தனி கவனம் பெற்றவர். தனது உயர்ந்த நோக்கம் கொண்ட பேச்சால் உலக மக்களையே கவர்ந்து வைத்துள்ள பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சரை பாராட்டியிருப்பது அரசியல் அரங்கில் தனி கவனம் பெற்றுள்ளது.
அதற்கு முதல் அமைச்சரின் செயல்பாடுகளும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அரசியல் கொள்கைகளில் மாறுபட்டு நின்றாலும் செயல்பாடுகளில் பாராட்டப்படுவதே அரசியல் நாகரிகமும் கூட. அந்த வகையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் தொட்டே அவரது செயல்பாடுகளை அவ்வப்போது பிரதமர் பாராட்டி வருகிறார்.
இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியபோது, முதலமைச்சர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு அதிகாரிகளுக்கு மீட்பு பணிகளை முடுக்கிவிட அறிவுறுத்தினார். அத்தோடு நின்றுவிடாமல் அன்று மாலையே நீலகிரிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தே அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.
பின்னர் அடுத்தநாள் முப்படை தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னரே மீண்டும் சென்னை புறப்பட்டார். முதலமைச்சரின் நேரடி பார்வை இருந்ததால் மீட்பு பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்தனர்.
முதலமைச்சரின் இந்த செயல்பாடுகள் பிரதமர் மோடியை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை. அதற்காக பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. முதலமைச்சர் பதவியேற்ற தொடக்க காலத்தில் அதிமுகவினர் கூட அவரது செயல்பாடுகளை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.