கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு தொடருமாம்: அதிர்ச்சித்தரும் சீரம் அதிகாரி
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு சில மாதங்களுக்கு தொடரலாம் என்று சீரம் தலைமை நிர்வாக அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.;
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 3 லட்சத்தைத் தாண்டி எண்ணிக்கை மிரட்டி வருகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு தொடரலாம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தும் அளவுக்கு தேவையான தடுப்பூசிகள் இன்னும் வந்தடையவில்லை என்று தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் பல மாநிலங்கள் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளன.
இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடரும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.