மழைக்காலம்ங்க...மெட்ராஸ் ஐ வரலாம் எச்சரிக்கையா இருங்க..!
மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ ஏன் வருகிறது? எப்படி வருகிறது? எப்படித் தடுக்கலாம் போன்ற விபரங்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
இடைவிடாத மழை, வெள்ளம் போன்றவை காரணமாக, டெல்லி, மும்பை முதல் அருணாச்சல பிரதேசம் வரை நாடு முழுவதும் வெண்படல அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுவே கான்ஜுன்டிவிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
கண் வெண்படல அழற்சியால் ஏற்படும் இந்த பாதிப்பு மெட்ராஸ் ஐ அல்லது கண் காய்ச்சல் அல்லது பிங்க் ஐ என்று பலவாறு அழைக்கப்படுகிறது.
தற்போது அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சில நாட்களாக மூடப்பட்டுள்ளன. மெட்ராஸ் ஐ (நமக்குத் தெரிந்த வார்த்தையை பயன்படுத்துவோம்) வந்துவிட்டால் கண்களில் சிவத்தல், அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் பாதிக்கப்பட்ட கண்ணில் பீளை உருவாவதால் காலையில் கண்களைத் திறப்பதில் சிரமம் ஏற்படலாம். கண்கள் வீங்கி ஒளியை பார்க்கமுடியாமல் கண்களில் கூச்சம் ஏற்படலாம்.
மெட்ராஸ் ஐ என்றால் என்ன?
மெட்ராஸ் ஐ, வைரஸ் கான்ஜுன்க்டிவிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது கண்களைப் பாதிக்கும் ஒரு தொற்று ஆகும். இது பல்வேறு வைரஸ்களால் ஏற்படுகிறது. மேலும் ஒருவருக்கு ஒருவர் எளிதில் பரவுகிறது. மெட்ராஸ் ஐ பாதிப்பை ஏற்படுத்துவது அடினோவைரஸ் எனப்படும் பொதுவான வைரஸ் ஆகும்.
மெட்ராஸ் ஐ ஏற்படுவதற்கான காரணங்கள்
பருவ மழைக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் ஒன்று மெட்ராஸ் ஐ. கண்ணின் கன்சங்டிவா என்ற விழி வெண்படலத்தில் ஏற்படும் வைரஸ் நோய் இதுவாகும். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இது பரவுகிறது. குறிப்பாக அடினோ வைரஸ் என்ற வைரஸால் வருகிறது.
மெட்ராஸ் ஐ-ன் அறிகுறிகள்
அதன் அறிகுறிகள் கண்களில் தூசி விழுந்ததுபோல உணர்வை ஏற்படுத்தும். ஆனால், மறுநாள் கண்கள் சிவப்பாகவும், பீளை தள்ளுவது இருக்கும். அதனால் கண்களை திறக்கமுடியாத நிலை ஏற்படும். மேலும், கண்களில் இருந்து நிறைய நீர் வரும், கண்ணில் எரிச்சல் இருக்கும்.
மெட்ராஸ் ஐ- சிகிச்சை
மெட்ராஸ் ஐ-க்கு மிகச் சிறந்த மருந்து நந்தியாவட்டை பூவின் சாறு. ஓரடுக்கு, ஈரடுக்கு, பல அடுக்கு நந்தியாவட்டை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நந்தியாவட்டை பூவின் சாறை எடுத்து பாதிக்கப்பட்ட கண்களில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகளை விட வேண்டும். இல்லை, பயமாக இருக்கிறது என்றால், நந்தியாவட்டை பூவை கண்ணில் வைத்து, சுத்தமான துணியை வைத்து கட்டிக் கொள்ளலாம்.
மேலும் கண்ணில் விடுவதற்கு தனியாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கண்களில் விடும் ட்ராப்ஸ் வாங்கி கண்களில் விட்டால் எரிச்சல் குறையும்.
மெட்ராஸ் ஐ தொற்றுமா..?
மெட்ராஸ் ஐ ஒருவரிடம் இருந்து மற்றொருக்கு பரவும் தன்மை கொண்டதாகும். மெட்ராஸ் ஐ பொறுத்தவரை சிறிய அளவிலான கண் தொற்று பாதிப்பு என்றாலும் உரிய சிகிச்சை பெறாவிட்டால் இது தீவிர பிரச்சினையாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
மெட்ராஸ் ஐ பரவாமல் தடுக்கும் வழி
- கண்களில் வெயில் படாமல் இருக்கவும், பரவுவதை தடுக்கவும் கருப்பு கண்ணாடி (கூலிங் க்ளாஸ்) அணியலாம்.
- பாதிக்கப்பட்வர்களின் துண்டு, தலையணை உறை, மேக் அப் சாதனங்கள் போன்றவைகளை பிறர் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
- மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் ஒரு சில நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
- மெட்ராஸ் ஐ தொற்றுள்ளவர்கள் அவர்கள் பயன்படுத்தும் கைக்குட்டை அலலது டிஸ்யூ பேப்பர்களை பத்திரமாக அகற்றுவது அவசியம்.
- மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் பொதுவாக பயன்படுத்தும் கிணறு, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற பொது இடங்களைத் தவிர்க்கலாம்....
- அதேபோல் எளிதில் பரவும் என்பதால் மாணவர்கள் பள்ளி,கல்லூரி செல்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல அலுவலகங்கள், மார்க்கெட் அலலது மால் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதை குணமாகும் வரை தவிர்ப்பது நல்லது.
- மெட்ராஸ் ஐ பாதிப்பு வந்தவர்கள் வீட்டில் இருக்கும்போது கண்களைத் தொட்டுவிட்டு கதவு, ஜன்னல் அல்லது வீட்டில் அடிக்கடி குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் பொருள்களை தொடாமல் இருப்பது பாதுகாப்பாகும்.