kuzhi nagam medicine-நகமும் அகம் காட்டும் கண்ணாடிதான் எப்படி? தெரிஞ்சுக்கங்க..!

நகம் அழகுக்காக பலர் நீளமாக வளர்ப்பார்கள். அதில் கின்னஸ் சாதனையும் பெறுவார்கள். நகம் நமக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது என்று பார்ப்போமா.?

Update: 2023-08-14 11:31 GMT

kuzhi nagam medicine-நகம் அகம் காட்டும் கண்ணாடி.(கோப்பு படம்)

kuzhi nagam medicine

நகம் எமது விரலுக்கு அழகு சேர்க்கும் என்பதுடன் விரலின் பாதுகாப்பது கவசம் நகமே. நகம் என்பது அழகுக்காக மட்டுமல்ல, அது ஒரு அத்தியாவசிய உறுப்பு. நகச்சுத்தி வந்திருக்கும்போது சைக்கிள் ஓட்டிப்பாருங்கள் அப்போதுதான் நகத்தின் அருமை புரியும்.

கண்ணுக்கு மை அழகு என்பது போல விரலுக்கு நகம் அழகு

விரலுக்கு ஒரு கவசம்போல அமைந்துள்ள நகம் ‘கரோட்டீன்’ எனும் புரதப்பொருளால் ஆனது. கண்ணில் பளிச்சென்று தெரிகிற, வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ, ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது. இதற்கு நகத் தளம் (Nail bed) என்று பெயர். நகத்துக்கு உணவும் உணர்வும் உயிரும் தருகின்ற ஒரு உயிர்ப்படுக்கை இது. இந்த நகத்தளத்தைக் கடந்து வளரும் நகப்பகுதி செத்துப்போய்விடும். இதனால்தான் நுனி நகத்தை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.

தேர்தலில் நீங்கள் ஓட்டுப்போட்டதற்கான அடையாளமாக விரலில் மையிடுகிறார்கள் அல்லவா? அந்தப் பகுதிக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர் (Nail bud). இதுதான் நகத்தை முளைக்க வைக்கிறது. இந்த இடத்தில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் நிறைய உள்ளன. இதனால், இந்தப் பகுதியை அழுத்தினாலே வலிக்கும்.

kuzhi nagam medicine


அடுத்தது, நகத்தைச் சுற்றியுள்ள ஆங்கில எழுத்தான U வடிவத் தோல் அமைப்பு (Nail fold). நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்புக்கு ‘லுனுலா’ (Lunula) என்று பெயர். நகத்துடன் இணைந்த தோல் பகுதிக்கு ‘எபோநைகியம்’ (Eponychium) என்று பெயர். நகத்தைச் சுற்றியுள்ள உள்தோலுக்கு ‘பெரியோநைகியம்’ (Perionychium) என்று பெயர். நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்கு ‘க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்று பெயர். இந்த அமைப்புகள் அனைத்தும் கைவிரலுக்கும் கால் விரலுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

ஒரு நகம் முழுதாக வளர்வதற்கு நான்கிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் வேகமாக வளரும். கோடை காலத்தில் அதிக அளவில் வளரும். கைவிரலில் ஒரு நகம் மாதத்துக்கு சுமார் மூன்று மில்லி மீட்டரும், கால் விரல் நகம் மாதத்துக்கு ஒரு மில்லி மீட்டர் வரையிலும் வளரும். தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருப்பது, சத்துக்குறைபாடு, சில வகை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவது, வயதாவது போன்ற காரணங்களால் நகத்தின் வளர்ச்சி குறையலாம். நகத்தின் முக்கிய வேலை நாம் அதிகமாக பயன்படுத்துகிற விரலின் முனைகளைப் பாதுகாப்பது.

kuzhi nagam medicine


நகம், நோய் காட்டும் கண்ணாடி

அட ஆமாங்க.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே அதுபோல நகம் ஒரு நோய் காட்டும் கண்ணாடி. ரத்தசோகை, மஞ்சள் காமாலை, இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், பூஞ்சை நோய் என்று 50க்கும் மேற்பட்ட நோய்களை இது நமக்குக் காட்டிக்கொடுத்து விடும். அந்த நோய்களில் முக்கியமானவற்றை இங்கே பார்ப்போம்.

வேதனைப்படுத்தும் நகச்சுத்தி

நகத்தின் மீது ஏதாவது விழுந்துவிட்டாலோ, அடிபட்டாலோ ரத்தம் கட்டி விண்ணென்று வலிக்கும். அப்போது நகத்தின் அடியில் கட்டிக்கொண்டிருக்கும் ரத்தத்தை நீக்கினால்தான் வலி குறையும். ரத்தக்கட்டு குணமாகும். சில பேர் ‘நகத்தை வெட்டுகிறேன்’ என்று நகத்தை ஒட்ட வெட்டிவிடுவார்கள். இன்னும் சிலர் நகத்தை கரும்பைக் கடிப்பதைப்போல் கடித்துத் துப்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்வதால், நகத்தில் பாக்டீரியா கிருமிகள் நுழைந்து புண்ணாகிவிடும்.

இதுதான் நகச்சுத்தி (Paronychia). இப்படி நகத்துக்குத் தானாக வரும் நோய்களும் உள்ளன. நாமாக வரவழைத்துக் கொள்ளும் நோய்களும் உள்ளன. இவை குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால் நகம் தரும் வேதனைகள் அதிகம். நகத்தை பிளேடால் வெட்டாமல், விரலால் பிய்க்காமல், நக வெட்டியால் வெட்டினாலே நகத்துக்கு வரும் பல ஆபத்துகளை தவிர்த்து விடலாம்.


நலம் கெடுக்கும் நகச் சொத்தை

kuzhi nagam medicine

அழகு உறுப்பாக நாம் கருதும் நகத்தின் அழகைக் கெடுப்பதற்கென்றே ஒரு நோய் உள்ளது. அதுதான் நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail). டிரைக்கோபைட்டன் ரூப்ரம் (Trichophyton rubrum) எனும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படுகின்ற இந்த நோய் கை விரல்களைவிட கால் கட்டை விரல்களையே அதிகமாக பாதிக்கும்.

சமையல் வேலை, வீட்டுவேலை, பாத்திரம் கழுவுவது போன்ற வேலை செய்கிறவர்கள் தண்ணீரில் அதிக நேரம் விரல்களைப் புழங்குவார்கள். அப்போது அவர்களுக்கு பூஞ்சைக்கிருமிகள் தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத் தடுக்க இவர்கள் வேலை முடிந்ததும் கைகளை கழுவிச் சுத்தமான துணியால் ஈரத்தைத் துடைத்து, விரல்களை உலர வைத்த பிறகுதான் அடுத்த வேலையில் ஈடுபடவேண்டும்.

இந்த பாதிப்பு வந்தவர்களுக்கு நகம் பால் போல வெளுத்துக் காணப்படும். சிலருக்கு நகம் மஞ்சள் நிறத்தில் கோடு கோடாகத் தெரியும். நகம் தடித்து கரடு முரடாகத் தெரியும். போகப்போக நகத்தில் பிளவு ஏற்பட்டு உடைந்துவிடும். இறுதியில் அது தானாகவே விழுந்துவிடும். நகச் சொத்தை ஏற்பட்டவர்களுக்குக் காலில் ஷூ அணிந்தால் கட்டை விரல் வலிக்கும். ஓட முடியாது. வேகமாக நடக்கவும் முடியாது.


சிகிச்சை என்ன?

இதற்கு சிகிச்சை அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பூஞ்சைக் கிருமிகளைக் கொல்வதற்கென்றே மாத்திரை மருந்துகளும் வெளிப்பூச்சுக் க்ரீம்களும் நிறைய உள்ளன. ஆனால், இவற்றுக்கெல்லாம் அவ்வளவு எளிதாக நகச்சொத்தை அசைந்து கொடுக்காது. மிகவும் பொறுமையாக, பல மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு நோய் குணமாகும். எனவே, இதற்கு நோய்த்தடுப்புதான் சிறந்த வழியாக இருக்கும்.

kuzhi nagam medicine

குழி விழுந்த நகம் என்று எதைச் சொல்வோம்?

சிலருக்கு கைவிரல் நகங்கள் மிகவும் வெள்ளையாக ஸ்பூன் போல குழி விழுந்து (Koilonychia) காணப்படும். ஒருவருக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுமானால் இம்மாதிரியான நகங்கள் காணப்படும். அதேவேளையில், கைக்குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் கால் விரல்களில் இம்மாதிரியான குழி விழுந்த நகங்கள் சில மாதங்களுக்குக் காணப்படும்.

இது நோயின் அறிகுறி அல்ல. இவர்களுக்கு இந்த மாதிரியான நகங்கள் தானாகவே சரியாகிவிடும். எனவே, அதுகுறித்து பயப்படத் தேவையில்லை.


கிளிமூக்கு நகம்

சிலருக்கு கைவிரல் நகங்கள் கிளிமூக்கு போல வீங்கிக்கொள்ளும். இதை ‘கிளப்பிங் நெய்ல்ஸ்’ (Clubbing nails) என்று சொல்வார்கள். இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி போன்றது. காரணம், இது உடலில் மறைந்திருக்கிற எட்டு நோய்களை வெளிக்காட்டுகின்ற ஒரு முக்கியமான அறிகுறி.

இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், சிரோசிஸ் எனும் கல்லீரல் நோய், பிறவிக் கோளாறுகள், இதயஉறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று உடலில் ஏற்பட்டிருந்தால் நகங்கள் கிளிமூக்கு போல வீங்கிக்கொள்ளும்.

இதை உடனே கவனித்து நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் நகம் மாறிவிடும். புகைப் பழக்கம் உள்ளவர்களிடம் இந்த வகை நகம் அதிகம் காணப்படும்.

kuzhi nagam medicine


நிறம் மாறும் நகங்கள்

நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் காணப்பட்டால் அந்த நகத்துக்கு ‘டெர்ரி நெல்’ (Terry nails) என்று பெயர். இது சிரோசிஸ் எனும் கல்லீரல் நோய், இதயச்செயலிழப்பு நோய் போன்றவற்றின் அறிகுறியாகும். பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற டைப் 2 நீரிழிவு நோயின் ஆரம்பகட்டத்தில் இந்த வகை நகம் சிலருக்குக் காணப்படுவது உண்டு.

நகத்தின் பிறை எனப்படும் லுனுலாவில் சிவப்புப்புள்ளிகள் காணப்படுமானால், அது சோரியாசிஸ் எனும் சரும நோயின் அறிகுறி. கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் போதும் இந்த வகை நிறமாற்றம் நகங்களில் ஏற்படுவது வழக்கம்.

முக்கியமாக, கட்டைவிரல் நகத்தில் இது காணப்படுவது அதிகம்.நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலோ, வெள்ளையாகவோ இருந்து, கீழ்ப்பகுதி மாநிறத்தில் இருக்குமானால் அது சிறுநீரக நோய் இருப்பதை வெளிக்காட்டுகிற அறிகுறி.

நகம் நீல நிறத்துக்கு மாறியிருந்தால், அது ரத்த ஓட்டம் சரியில்லை என்பதைக் காட்டுகிற அறிகுறி. பொதுவாக குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்னை இருந்தால், இம்மாதிரியான நிற மாற்றங்கள் நகத்தில் தோன்றும். நகம் முழுவதுமே மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது மஞ்சள்காமாலைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

அல்லது நுரையீரல் நோய், நிணநீர்த்தேக்க நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். நத்தைக்கூடு போன்ற நகம் இருந்தால் அது ‘பிராங்கியக்டேசிஸ்’ எனும் நுரையீரல் நோய் இருப்பதைக் காட்டுகின்ற அறிகுறி.

kuzhi nagam medicine

நகத்தின் அடிப்பாகத்தில் எண்ணெய் விட்டதுபோல் காணப்படுமானால், அதற்கு ‘ஆயில் ட்ராம் சிண்ட்ரோம்’ என்று பெயர். இதுவும் சோரியாசிஸ் நோயின் ஆரம்ப அறிகுறி. நகத்தில் புள்ளி புள்ளியாக குழிகள் விழுமானால் அதுவும் சோரியாசிஸ் நோயின் அறிகுறிதான்.இரட்டை நகம். சில நேரங்களில் நகங்கள் இரண்டாகத் தெரியும். காரணம், ‘க்யூட்டிக்கிள்’ எனும் மேல் தோல் நகத்தின் மேலேயே வளர்ந்துவிடும். இதற்கு ‘டெரிஜியம்’ (Pterygium) என்று பெயர்.


ஆபத்தான கறுப்பு நகம்

நகத்தில் கறுப்புக்கோடுகள் காணப்பட்டால், ரத்தக்கட்டு என்றோ, மச்சம் என்றோ நினைத்து கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. இது ‘சப்உங்குவல் மெலனோமா’ (Subungual melanoma) என்ற அரியவகை புற்றுநோயாக இருக்கலாம். இது ஒரு மோசமான புற்றுநோய் வகை. இது வந்துவிட்டால் நோயாளியின் ஆயுள்காலம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி.

சத்துகள் குறைந்தால்?

உடலில் கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற சத்துகள் குறைந்தாலும் நகத்தின் குறுக்கே அழுத்தமான வெள்ளைக்கோடுகளோ, வெள்ளைப் புள்ளிகளோ தோன்றுவதுண்டு. ஆர்சனிக் நச்சு உடலில் இருந்தாலும் நகத்தில் வெள்ளைக்கோடுகள் காணப்படும். சரும நோய் மருத்துவரை ஆலோசித்து நோய் அறிந்து சிகிச்சை பெற்றால் இந்தமாதிரியான கோடுகள் மறைந்துவிடும்.

உள்நோக்கி வளரும் நகம்

சிலருக்கு நகம் உள்நோக்கி (Ingrown nails) வளர்வதுண்டு. முக்கியமாக, கால் விரல் நகங்கள் இந்த மாதிரி வளர்வது வழக்கம். இதில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வலியும் வீக்கமும் உண்டாகும். இது பிறவியிலேயே ஏற்படுவது. தகுந்த காலணிகளை அணிவதும் பொருத்தமான ஷூக்களை அணி்வதும் பிரச்னையைப் பெரிதாக்காமல் பாதுகாக்கும்.

kuzhi nagam medicine


நகங்களைப் பாதுகாக்க என்ன செய்வது? 

  • அடிக்கடி விரல்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • கை, கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள்.
  • நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் வாய்க்கும் சென்றுவிடும். இதனால் குடல் புழு முதல் டைபாய்டு வரை பல நோய்த்தொற்றுகள் ஏற்படும்.
  • குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
  • வேதிப்பொருட்களின் பயன்பாட்டால் நகங்கள் உடையும். இதைத் தவிர்க்க கைகளில் தகுந்த பாதுகாப்பு உறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
  • அடிக்கடி நகத்துக்கு பாலிஷ் போடாதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆசைக்குப் போட்டுக்கொள்ளலாம்.
  • அடிக்கடி பாலிஷ் போட்டுக்கொள்பவர்கள் பாலிஷை அகற்றுவதற்கு பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவார்கள். நகப்பாலிஷைவிட பாலிஷ் ரிமூவர்தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதில் கவனம் தேவை
Tags:    

Similar News