கோவை தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் ரூ.13 இலட்சம் பணம், நகை கொள்ளை

கோவை தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2024-01-25 12:18 GMT

கொள்ளை நடந்த வீடு.

கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி வீதி பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ். வட மாநிலத்தை சேர்ந்த இவர், பஞ்சாலைகளுக்கு தேவையான பருத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை கமலேஷ் தொழில் நிமித்தமாக வெளியில் சென்று இருந்த நிலையில், அவரது மகன் மற்றும் ஊழியர்கள் சிலர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பிற்பகல் கமலேஷ் வீட்டிற்கு இரு கார்களில் பத்துக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் வந்துள்ளது.

பின்னர் கமலேஷின் வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல், கமலேஷின் மகன் உள்ளிட்ட நான்கு பேரை மிரட்டி கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர். இதையடுத்து வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் 13 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த கமலேஷ், வீட்டுக்கு வந்த நபர்கள் கட்டிப் போடப்பட்டு இருந்த நான்கு பேரையும் மீட்ட கமலேஷ், இந்த துணிகர கொள்ளை குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.எஸ் புரம் காவல் துறையினர், இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகர துணை காவல் ஆணையர் சரவணகுமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அந்த பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வளவு நகைகள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து வீட்டில் இருந்த நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொள்ளையர்களை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நகரின் மையப் பகுதியான ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News