ஆன்லைனில் ரூ.40 லட்சம் மோசடி: கேரளா வாலிபர் கைது

ஈரோட்டைச் சேர்ந்த இருவரிடம் ஆன்லைனில் முதலீடு எனக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-10-06 03:00 GMT

கைது செய்யப்பட்ட ஜாகீர்கான்.

ஈரோட்டைச் சேர்ந்த இருவரிடம் ஆன்லைனில் முதலீடு எனக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

ஈரோடு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் ஆன்லைன் வழியாக முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ரூ.23 லட்சத்தை இழந்தார். இதே போல் ஈரோடு சம்பத்நகரை சேர்ந்த ராம்குமார் ஆன்லைன் வழியாக முதலீடு செய்து ரூ.17 லட்சத்தை இழந்தார்.

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், இவ்விரு வழக்குகளின் முக்கிய குற்றவாளி கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க, காவல் ஆய்வாளர்  கவிதா லட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் பாரதிராஜா, காவலர்கள் கவுரிசங்கர், புவனேஷ்குமார், பூவழகன் ஆகியோர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவினர் கேரள மாநிலத்துக்கு விரைந்து சென்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியை சேர்ந்த ஜாகீர்கான் (வயது 32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News