மண்ணச்சநல்லூர் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா
திருச்சி,மண்ணச்சநல்லூர்அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை டிஇஎல்சி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆசிரியையின் கணவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அவரை பரிசோதித்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 69 ஆசிரிய, ஆசிரியர்கள், 15 அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் என 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.