ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில்களில் விழா!

ஏப்ரல் 4ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இந்த குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பூசாரிகள் மற்றும் நேர்த்திக்கடன் இருக்கும் பக்தர்கள் அம்மனை வேண்டி குண்டம் இறங்குவார்கள்.

Update: 2023-03-26 07:23 GMT

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில்களான அருள்மிகு சின்ன மாரியம்மன் கோவில், அருள் மிகு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் ஆகியன அமைந்துள்ளன. இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது இந்த திருவிழா.

தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்விழாவில் நேற்று இரவு கம்பம் நடும் விழா நடைபெற்றது. மூன்று கோவில்களிலும் தனித்தனியாக கம்பம் நட்டு இறை அருள் பெற வழிபாடு செய்தனர் பக்தர்கள். இரவு 8.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக அலங்காரம் செய்யப்பட்டு பின் தீபாராதனையும் நடைபெற்றது. பயபக்தியுடன் மக்கள் சாமி கும்பிட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் பூசி, காப்புக் கட்டி, பூஜை செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 3 கம்பங்களை கோயில்கள் பூசாரிகள், தோளில் ஊர்வலமாக சுமந்து வந்தனர். மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக மக்கள் சேர்ந்து இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஊர்வலம் பெரியார் வீதியில் துவங்கி, கச்சேரி வீதி, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் பெரியமாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் கோவில் என மூன்று இடங்களிலும் மூன்று கம்பங்கள் நடப்பட்டன.

இந்த விழாவில் ஈரோடு மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.

வரும் ஏப்ரல் 4ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இந்த குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பூசாரிகள் மற்றும் நேர்த்திக்கடன் இருக்கும் பக்தர்கள் அம்மனை வேண்டி குண்டம் இறங்குவார்கள். அதனைத் தொடர்ந்து மாவிளக்கு திருவிழா நடைபெறும். பெண்கள் அனைவரும் சரியாக 8 மணிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட ஊர்வலமாக வருவார்கள்.

மறுநாள் 5ம் தேதி காலையில் தேர் நிகழ்ச்சி நடைபெறும். தேர் வடம் பிடித்து இழுக்கும் இந்நிகழ்வு காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 8ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News