பள்ளி மாணவி சாலையை கடக்கும்போது டூவீலர் மோதி உயிரிழப்பு..!
விபத்துக்கான மாதிரி படம்
திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மா சத்திரம் அரசு பள்ளிக்கு வந்த 4-ம் வகுப்பு மாணவி சாலையை கடக்கும் போது வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு எட்டு வயாது மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி விபத்திற்கு காரணமான மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சீதாபுரம் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசன். அவரது மனைவி பொன்மணி. இவர்களது மகள் பிரதிபா (வயது-8). இவர் அருகில் உள்ள கனகம்மாசத்திரம் அரசு தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு குழந்தை பிரதிபாவை அவரது தாயார் பொன்மணி அழைத்துச் சென்றுள்ளார்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்து இவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, திருவள்ளூரில் இருந்து வேகமாக திருத்தணி நோக்கி வந்த இரு சக்கர வாகனம் மோதிய வேகத்தில் பள்ளி மாணவி பிரதிபா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த பகுதியில் இருந்து விபத்திற்கு காரணமான இளைஞர் இருசக்கர வாகனத்துடன் தப்பிச்செல்ல முயற்சி செய்யும்போது அப்பகுதி பொதுமக்கள் அவனை விரட்டிப் பிடித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பள்ளி மாணவி பிரதிபாவின் உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்திற்கு காரணமான திருவள்ளூர் பகுதியை சேர்ந்த மதன்குமார் வயது-19 என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த கனகம்மாசத்திரம் போலீசார் அந்த இளைஞரை சிறையில் அடைத்தனர். பள்ளிக்குச் செல்ல நெடுஞ்சாலையை கடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் உயிரிழந்த நான்காம் வகுப்பு மாணவி இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போல் விபத்துக்கள் மேலும் நடைபெறாமல் இருக்க இந்த பகுதியில் போலீசார் அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு இந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu