புது கும்மிடிப்பூண்டி ஏரியில் விதிகளை மீறி அள்ளப்படும் சவுடு மணல்..!
புதுகும்மிடிப்பூண்டி ஏரியில் அள்ளப்படும் சவுட்டு மண்.
கும்மிடிப்பூண்டி அருகே, புது கும்மிடிப்பூண்டி ஏரியில் அரசு நிர்ணயித்த அளவை மீறி மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்..
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி ஏரியில் சவுட்டு மண் எடுக்க தனிநபருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் அரசு அனுமதி பெற்று குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தினமும் 15 க்கு மேற்பட்ட ஜேசிபி எந்திரம் மூலம் 1000.க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது.
இந்த புது கும்மிடிப்பூண்டி ஏரியின் நீர் பாசன வசதியை நம்பி கும்மிடிப்பூண்டி, பண்பாக்கம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் அப்பகுதி விவசாயிகள் நெல் பயிர் மற்றும் காய்கனிகளை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவு ஆழத்திற்கு மண் அள்ளுவதாகவும், நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வருவதால் தாங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குவாரியில் மணல் எடுப்பவர்கள் மூன்றடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்ற விதிகள் இருந்து வந்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக நிலத்தடி நீரே சுரந்து வெளியே வரை சுமார் சுமார் 10 அடி வரை ஆழம் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிகின்றனர்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர் மீது கனிமவள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தொலைந்துபோன நிலமும் நீரும்
ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம். ஆறுகளில் மணல் தான் நீரை தக்கவைக்கும் அட்சயபாத்திரம். அந்த மணலையும் அள்ளி அள்ளி ஆறுகளை மலடாக்கிவிட்டோம். எந்த அரசியல்வாதிக்கும் எதிர்கால சந்ததிபற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு அதைப்பற்றிய ஞானமும் இல்லை. தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தின் முக்கியத்துவம், மரங்களின் முக்கியத்துவம், மலைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வும் இல்லை. இதற்கான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாத வரை இந்த சமூகத்துக்கு விடிவும் கிடையாது.
அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் சிறிதும் இல்லை. அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள். இன்னும் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இங்கு வெறும் கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே எச்சமாக நிற்கும். அப்போது சோற்றுக்கு செங்கல், சிமிண்ட் போன்றவைகளை மட்டுமே இவர்கள் உண்ணவேண்டும்.
நமது தலைமுறையிலேயே அந்த கொடிய காட்சியை நிச்சயம் நாம் பார்க்கத்தான் போகிறோம். அதற்குள் விழித்து எழுந்தால் இந்த பூமி நம்மை மன்னிக்கும். இல்லையேல் மீண்டும் ஒரு சுனாமிபோல ஒரு பிரளயம் நம்மை நிச்சயம் அழித்துவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu