ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட தீண்டாமை வேலி பகுதி அளவு அகற்றம்..!
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
திருவள்ளுர் அடுத்த தாமரைப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் அடைக்கப்படுள்ள தீண்டாமை கம்பி வேலியை அகற்றிட கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதை தொடர்ந்து அதன் விளைவாக தீண்டாமை வேலியை கண்துடைப்புக்காக சிறிதளவில் வேலியை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருவள்ளுர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் 30 குடும்பங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தாமரைப்பாக்கம் அருகே பூண்டி ஏரியிலிருந்து சோழவரம் ஏரிக்கு திறந்து விடப்படும் பேபி கால்வாய் கரையோரம் என்பதாலும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த குமார் என்பவர் ஐந்து குடும்பங்கள் வசித்து வந்த 30 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இரும்பு வேலி அமைத்தார்.
பேபி கால்வாய் ஓரத்தில் உள்ள சென்னை குடிநீர் வடிகால் வாரியம் நிலத்திலும் மற்றொருவர் பட்டா நிலத்திலும் வாழ்ந்து வந்த மக்கள் தனிநபர் அமைத்த இரும்பு கம்பி வேலியில் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், மற்றும் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் வெளியேற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இத்தகைய தீண்டாமை வேலியை அகற்றிப் பாதை அமைத்துத் தரக் கோரி அப்பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் அப்பகுதி மக்களின் நிலை தொடர்பாக செய்திகள் வெளியே கொண்டு வந்ததால், திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் நேரில் சென்று ஆய்வு செய்து அந்த மக்களுக்கு தீண்டாமை வேலியை அப்புறப்படுத்தாமல் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் நிலத்தில் சுத்தம் செய்து பின்புறம் வழி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
அந்த வழிப்பாதை என்பது போதிய வெளிச்சம் இல்லாமலும் இரவு நேரங்களில் விஷச் ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருவதால் பாதை பாதுகாப்பற்ற பாதை என்பதால் அத்தகைய பாதையை ஏற்காமல் அப்பகுதி மக்கள் காலகாலமாக பயன்படுத்தி வந்த முன்பக்க பாதையை அடைத்து வைத்துள்ள தீண்டாமை வேலியை அகற்றிடக் கோரி தாமரைப்பாக்கம்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் குழந்தைகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் தீண்டாமை வேலி அமைத்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் குமார் பாதிக்கப்பட்ட மக்களிடம் தாமரைப்பாக்கம் குறுவட்ட அலுவலகத்தில் இரு தரப்பினரும் வைத்து நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீர்நிலைப் பகுதியில் குடியிருக்கும் அப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் ஒரு சென்ட் நிலம் என ஒதுக்கீடு செய்து 30 குடும்பங்களுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வழங்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களுக்கு அரசு வீடுகள் கட்டித் தந்து அடிப்படை வசதிகள் செய்து தரும் வரையில் இந்த பகுதிகளை வாழ்வதற்கும் அவளுக்கு அவகாசம் கொடுத்து தீண்டாமை முள்வேலியை கடந்து வருவதற்கும் வசதியாக வேலியின் ஒரு பகுதி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் கண் துடைப்புக்காக மட்டுமே சிறிய அளவில் தீண்டாமை வேலியை அகற்றி உள்ளதாகவும், தங்களுக்கு அரசு அளித்துள்ள ஒரு சென்ட் நிலம் போதாதவை என்பதால் மூன்று சென்ட் நிலமாக ஒதுக்கீடு செய்து அந்த இடத்தில் அரசு தங்களுக்கு வீடுகள் கட்டித் தந்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் வீடுகள் கட்டி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும், அதுவரை அம்மக்கள் வாழ்ந்திருந்த இடத்திலே வசிப்பதற்கும் அவர்கள் சென்று வந்த பாதை இரும்பு வேலிகளை கொண்டு அடைக்கப்பட்டு இருந்ததை தற்காலிகமாக அகற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu