ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் கைது
போலீஸாரால் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ரௌடிகள்
புழல் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறு. ரவுடிகளை வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (43). இவர் வீட்டு மனைகள், வீடுகள் வாங்கி, விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றை புத்தகரத்தில் நடத்தி வருகிறார். சூரப்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீவாஸ் (47) ஆவடி மாநகர ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷுக்கு சொந்தமான சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகர் பகுதியில் உள்ள வீட்டுமனையை உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் பத்திரப்பதிவு செய்வதில் ஏற்கெனவே இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போல உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் வீடு கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷிடம் 5லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை சதீஷ் திரும்ப கேட்டதில் உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் பணம், கொடுக்கல் தகராறில் சதீஷின் ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு தமது ரவுடி கூட்டாளிகளுடன் காரில் சென்ற உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அலுவலகத்தில் இருந்து பொருட்களையும், கண்ணாடியையும் அடித்து உதைத்த கும்பல் சதீஷை கத்தியால் வெட்டியதில் நெற்றி மற்றும் வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து 5பேரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் இருந்த சதீஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட தகவலின் பேரில் மருத்துவமனைக்கு சென்று புகாரை பெற்ற புழல் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட தனிப்படை காவல் துறையினர் ஆந்திர மாநிலம் விரைந்து கோனே அருவி அருகில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் திலீப், ஜெகன், ரூபன் ஆகிய 3பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார் மற்றும் 2கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரவணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர்கள் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸை புழல் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட திலீப் (33), சரவணன் என்கிற வெள்ளை சரவணன் (32) ஆகிய இருவரும் புழல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளாகவும், ரூபன் (34) பேசின்பாலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும், ஜெகன் என்கிற கருப்பு ஜெகன் (21) எம்.கே.பி நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் 4பேர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் மீது மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டு உள்ளது.
இதனையடுத்து 7பிரிவுகளில் புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான 4சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என 5 பேரையும் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே ரவுடிகளுடன் இணைந்து குற்ற செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu