கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூர் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதிலும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்வதிலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதிலும், மருத்துவமனையிலிருந்து குணமடைந்து செல்வோரை வீட்டிற்கு கொண்டு சேர்ப்பதிலும் கைகொடுக்கும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவின் பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நோயாளிகளை அழைத்துச்செல்ல, 15 ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை தலைவர் அரசி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், சோதனை அடிப்படையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க உதவும்.
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் நோயாளிகளை வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும் பயன்படும். 15 ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அரசின் 1074 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும்.
ஆட்டோக்களில் பயணம் செய்யும் நோயாளிகளிடமிருந்து ஓட்டுநர்களை தனிமைப்படுத்த ஓட்டுநர் மற்றும் நோயாளிகளின் இருக்கைக்கு இடையே பிளாஸ்டிக் முகப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு என முக கவசம் கிருமி நாசினி மற்றும் கையுறை உள்ளிட்ட அனைத்தும் லீகல் ரைட்ஸ் கவுன்சில் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் தேவைக்கேற்ப ஆட்டோக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தபடும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu