துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் இருவர் கைது
செங்குன்றம் அருகே நிலம் மற்றும் பணம் மோசடி செய்து துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பாஜக மற்றும் அதிமுக பிரமுகர் என இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (48). இவர் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கட்டிட பணிகளுக்கு தேவையான செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை சப்ளை வந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளரான எஸ்.எம்.ஜி.சீனிவாசன் (49) தானும் இதே தொழிலை செய்து வருவதாகவும், இருவரும் இணைந்து தொழில் செய்யலாம் எனவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருவதால் அதிலும் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாத்திக்கலாம் என கூறி கண்ணனை தனது தொழில் கூட்டாளியாக சீனிவாசன் சேர்த்துள்ளார்.
இருவரும் இணைந்து கடந்த 15ஆண்டுகளாக தொழில் செய்து வந்துள்ளனர். பல்வேறு இடங்களில் மனை வாங்குவதற்காக சீனிவாசனுக்கு, கண்ணன் அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சீனிவாசன் பல்வேறு இடங்களில் மனை வாங்குவதற்கு என சுமார் 18கோடி வரை கண்ணன் பணம் கொடுத்துள்ளார். இந்த தொழில் செய்து வந்த நேரத்தில் பாடியநல்லூரை சேர்ந்த பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் சீனிவாசன் மூலமாக கண்ணனுக்கு அறிமுகமாகி உள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் சில இடங்களை வாங்கியுள்ளனர். மேலும் இருவரது பெயரில் சில இடங்களை பத்திரப்பதிவு செய்து வங்கியில் கடன் பெறுவதற்கு சிபில்ஸ்கோர் அதிகரிக்கும் எனவும் அப்போது கடன் பெற்று தொழில் செய்யலாம் என சீனிவாசன் கூறியுள்ளார்.
தொடர்ந்து வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து சுமார் 3.80கோடி ரூபாய் சீனிவாசன் கடன் பெறுவதற்கு கண்ணனும், அவரது மனைவியும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளனர். தொடர்ந்து கண்ணனும் அவரது மனைவியும் கையெழுத்திட்டது போல மேலும் ஒரு ஆவணத்தை போலியாக தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் இருந்து மீண்டும் 3கோடி ருபாய் கடன் பெற்றுள்ளார் சீனிவாசன்.இதுகுறித்து கண்ணன் தம்முடைய பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது சீனிவாசனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்தமாதம் 21ஆம் தேதி பணத்தை திருப்பி தருவது குறித்து பேசுவதற்காக தம்முடைய வீட்டிற்கு வருமாறு சீனிவாசன் கூறியதன் பேரில் கண்ணன் சீனிவாசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வெங்கடேசன் கொடுத்த கை துப்பாக்கியை சீனிவாசன் வாங்கி கண்ணன் நெற்றியில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கண்ணன் செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆயுதம் வைத்திருத்தல், கொலை முயற்சி, மோசடி உள்ளிட்ட 9பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேசன் (49), அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எம்.ஜி.சீனிவாசன் (49) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கைத் துப்பாக்கிகள், தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பண மோசடி செய்து துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்,அதிமுக நிர்வாகி ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu