முதல்வர் வழங்கிய காசோலைக்கு வங்கி பணம் ஒதுக்காததால் மகளிர் குழுவினர் கவலை

முதல்வர் வழங்கிய காசோலைக்கு வங்கி பணம் ஒதுக்காததால் மகளிர் குழுவினர் கவலை
X

முதலமைச்சரிடம் சுழல் நிதிக்கு காசோலை பெற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் மகளிர் சுயஉதவிக்குழுவினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காசோலைக்கு வங்கிக்கு பணம் ஒதுக்காததால் மகளிர் சுயஉதவி குழுவினர் கவலையடைந்தனர்.

திருவள்ளூர் அடுத்த திருத்தணியில் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய சுழல் நிதிக்கான காசோலைக்கான பணத்தை வங்கியில் ஒதுக்கவில்லை எனவும், சம்பிரதாயத்திற்காகவே அந்த காசோலை வழங்கியதாக மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாக திருவள்ளூரை சேர்ந்த மகளிர் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருத்தணியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் மாநில அளவில் ரூ.3 ஆயிரம் கோடி அளவில் பல்வேறு வங்கிகள் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு காசோலைகளை வழங்கியதோடு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான சுழல் நிதிக்கான காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதேபோல், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள கார்த்திகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் அன்றைய நாளில் முதல்வரால் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் முதல்வரால் வழங்கிய காசோலையை சுழல் நிதியை கணக்கில் வரவு வைப்பதற்காக ஆர்வத்துடன் குழுவினர் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கிருந்த வங்கி அதிகாரிகள் முதல்வர் வருவதால் சம்பிரதாயத்திற்காக காசோலையை அவசரமாக வழங்கியதாகவும், இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்றும், உங்கள் துறை அதிகாரிகளிடம் காசோலையை திருப்பி அளிக்கும் படி வங்கி அதிகாரிகளிடம் கூறினார்களாம். இதனால் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 12 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கார்த்திகை மகளிர் குழுவைச் சேர்ந்த பிரியங்கா கூறுகையில், கடந்த 14-ஆம் தேதி திருத்தணியில் நடைபெற்ற முதல்வர் விழாவிற்கு காலை 6 மணிக்கு அழைத்துச் சென்று 12மணி வரை காத்திருந்து காசோலை பெற்ற மகிழ்ச்சியில் இருந்த நாங்கள் அந்த காசோலைகயை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தந்து வரவில் வைக்க சென்றபோது முதல்வர் வழங்கிய காசோலைக்கு பணம் ஒதுக்கவில்லை என்பதை வங்கி அதிகாரிகள் தெரித்ததோடு, சம்பிரதாயத்திற்காக அந்த காசோலை வழங்கப்பட்டுள்ளதை அறிந்து கவலையில் உள்ளோம் என்றார்.
அதையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான மகளிர் சுய உதவிக்குழுவைச் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் கையால் பெற்ற காசோலைக்கு பணம் கிடைக்காத மகளிர் குழுவினரின் ஆதங்கம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!