சமரசம் பேச வந்த வருவாய்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

சமரசம் பேச வந்த வருவாய்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை
X

திருக்கண்டலம் ஊராட்சியில் சமரசம் பேச வந்த வருவாய் துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அதிகாரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அலுவலகத்துக்கு வருவார் என்று துணை தாசில்தார் உறுதி கூறினார்

திருவள்ளூர் அருகே திருக்கண்டலம் ஊராட்சியில் சமரசம் பேச வந்த வருவாய் துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் சிலருக்கு இறப்பு சான்று தராமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளாராம். பட்டா கேட்டு மனு செய்தால் பெல்ட் ஏரியா என்று கூறி அதனையும் நிலுவையில் வைத்து விடுகின்றாராம். இவ்வாறு இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் வைத்தனர்.

இந்நிலையில், இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் புகார் மனு அனுப்பி இருந்தார்.இருப்பினும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் துணைத் தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான பி.ரவி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் கிராம நலச்சங்கம், சுமை தாங்கி தொழிலாளர்கள் சங்கம், மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம பொதுமக்கள் சார்பில் திருக்கண்டலம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியின், அலுவலகத்தை இன்று காலை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி உத்தரவின் பேரில் துணை தாசில்தார் டில்லி ராணி, வருவாய் அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் ஆகியோர் திருக்கண்டலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு வந்தனர்.

இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் விரைந்து வந்தனர்.பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இறப்பு சான்று குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பெல்ட் ஏரியாவில் பட்டா கேட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாள்தோறும் கிராம நிர்வாக அதிகாரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அலுவலகத்துக்கு வருவார் என்று துணை தாசில்தார் டில்லி ராணி உறுதி கூறினார். இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு நன்றி கூறினார். இதனால் போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக விளக்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்னையால் சுமார் இரண்டு மணி நேரம் இப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.



Tags

Next Story
future ai robot technology