ஊத்துக்கோட்டை லச்சிவாக்கம் ஏரியில் சேதமடைந்த மதகு... தண்ணீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…
மதகு சேதமடைந்துள்ளதால் கசிவு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் காற்றுடன் கனமழை பெய்தது. மேலும், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாதல் அவை முழுமையாக நிரம்பின.
இருப்பினும், சில இடங்களில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பாத நிலை காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த லச்சிவாக்கம் பகுதியில் சுமார் 23 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியும் முழுமையாக நிரம்பியது.
இந்த ஏரியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. புயல் கரையை கடந்த நிலையில், முழுமையாக நிரம்பி இருந்த ஊத்துக்கோட்டை லச்சிவாக்கம் ஏரியில் தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தநிலையில், லச்சிவாக்கம் ஏரியின் மதகில் இருந்து தண்ணீர் கசிந்து வீணாகி வருவதே தண்ணீர் குறைவுக்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். லச்சிவவாக்கம் ஏரியில் இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், ஒரு மதகில் ஏற்பட்ட சேதம் காரணமாக அதில் இருந்து தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. மழை காலத்திற்கு முன் ஏரி மதகுகள் பராமரிப்பு பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதே தற்போது ஏரியில் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வெளியேறி வருவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதே நிலையில் ஏரியில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறினால் ஓரிரு மாதங்களில் லச்சிவாக்கம் ஏரியை நம்பி விவசாயம் செய்து வரும் விளை நிலங்களில் பயிர் செய்ய முடியாமல் தரிசாக விட வேண்டிய சூழல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu