மாற்று இடம் இல்லாததால் இறந்தவரின் உடலை ஆறுவழிச்சாலையில் எரியூட்டியதால் பரபரப்பு
பைல் படம்
திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் பல தலைமுறையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் 6 வழி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்று இடம் இல்லாததால் இறந்தவரின் உடலை 6 வழிச்சாலை யிலேயே வைத்து தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரேனும் உயிரிந்தால் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு பகுதி தற்பொழுது நெமிலிச்சேரி மற்றும் திருப்பதி இடையே சுமார் 364 கோடி செலவில் அமைக்கப்படும் 6 வழிச்சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காக்களூர் பகுதியில் வசிக்கும் மக்கள் யாரேனும் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு சுடுகாடு இல்லை. நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகமும் மாற்று இடத்தை ஒதுக்காததால் அப்பகுதியில் உயிரிந்த கார்த்திகேயன் என்பவரது சடலத்தை ஊர் மக்கள் ஊர்வலமாக கொண்டு வந்து நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் சாலையின் நடுவில் வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், திருவள்ளூர் தாலுகா ஆய்வாளர் கமலஹாசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடந்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் சுடுகாடு வசதி கேட்டு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், உடலை எரித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu