செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வார கடைபிடிக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை சென்னை வடக்கு சரக போக்குவரத்துத்துறை இணை ஆணையர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைக்கவசம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் காவல்துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர். சுங்கச்சாவடியில் தொடங்கி பாடியநல்லூர், செங்குன்றம் சென்று மீண்டும் சுங்கச்சாவடியில் பேரணி முடிவடைந்தது.
தொடர்ந்து பேருந்தில் செய்யப்பட்டிருந்த சாலை விதிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பயணிப்பர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும், வேக கட்டுப்பாடுகளையும், சாலை விதிகளையும் பின்பற்றி விபத்துக்களை தவிர்க்க வேண்டும், செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்திவிட்டும் வாகனங்கள் ஓட்டக்கூடாது, கார்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அப்போது அறிவுறுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை வடக்கு சரகத்திற்கு உட்பட்ட, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu