செங்குன்றம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட புரட்சி பாரதம் கட்சியினர்
செங்குன்றம் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கட்டண உயர்வை கண்டித்தும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தியும்,உள்ளூர் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் வடமாநில தொழிலாளர்களை சுங்கச்சாவடியில் நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்குன்றம் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 1ஆம் தேதி முதல் 10% வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. சுங்கக்கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே அமைந்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். சுங்க கட்டண உயர்வு காரணமாக வாகன வாடகை உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்படுவதாக குற்றம் சாட்டினர். சுங்கச்சாவடியில் வட மாநில தொழிலாளர்களை பணியமர்த்தி உள்ளூர் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலுக்கும் கண்டனத்தை தெரிவித்தனர்.
சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற்று உள்ளூர் பணியாளர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சுங்கச்சாவடி அருகே சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய போது சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu