நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட எம்எல்ஏ…
மாணவி லாவண்யாவுக்கு நிதியுதவி வழங்கினார் கோவிந்தராஜன் எம்எல்ஏ.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரிட்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் - சுஜாதா தம்பதியின் மகள் லாவண்யா (வயது 18). முனிராஜ் கூலித் தொழில் செய்து வருகிறார். மாணவி லாவண்யா கடந்த 2020 ஆம் ஆண்டில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 600-க்கு 538 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
பின்னர், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் எழுதிய மாணவி லாவண்யா தேர்ச்சி பெறவில்லை. அதன்பிறகு, அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து மாணவி லாவண்யா படித்தார். ஓராண்டு அங்கு பயிற்சி பெற்ற மாணவி சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 240 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்க்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், மாணழி லாவண்யாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
ஆனால், மாணவி லாவண்யாவுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும் அவர் அங்கு தங்கி படிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றியும், கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாமலும் தவித்து வந்தார். இதனை அறிந்த கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மாணவி லாவயண்யாவின் வீட்டிற்கு நேரடியாக சென்றார்.
தொடர்ந்து, மாணவி லாவண்யா மற்றும் அவரது பெற்றோரை சந்தித்த கோவிந்தராஜன் எம்எல்ஏ, ஐந்து ஆண்டுகளுக்கு படிப்பிற்கான அனைத்து செலவினை மாதம் 25 ஆயிரம் விதமான 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்வதாக உறுதி அளித்து தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பின்னர், முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாணவி லாவண்யாவிடம் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் வழங்கினார். அவருடன் பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகர், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மூர்த்தி ஆகியோர் உட்பட கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து அவரது சொந்த கிராமத்தில் அனைவரும் அவரை பாராட்டி மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்து மாணவி லாவணஅயா கூறியதாவது:
எனது மருத்துவ படிப்பிற்கான செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தேன். எனக்கு சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் படிப்பிற்கான செலவினை வழங்கி உள்ளார். இதற்காக, அவருக்கு எனது சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ படிப்பு முடித்த பின்னர் கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என மாணவி லாவண்யா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu