கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் பட்டுவாடா..!

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம்  பட்டுவாடா..!
X

பணம் பட்டுவாடா செய்யும் தலைவர் 

தேர்வாய் கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கை சமாளிக்க மக்கள் கேள்வி கேட்காமல் இருக்க பணம் பட்டுவாடா செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் 61 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இதில் புது கும்முடிபூண்டி, தேர்வாய், சித்தராஜா கண்டிகை, பெரிய ஓபுளாபுரம், பாத்தபாளையம், ஈகுவார்பாளையம், உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிக அளவில் தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

இதனால் மேற்கண்ட தொழிற்சாலைகளில் நடைபெறும் அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் வரவு செலவு கணக்கு குறித்து அதிக அளவில் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். இதனால் பிரச்சனைகள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் இதனை சமாளிக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி கடந்த 15 ஆம் தேதி தேர்வாய் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது.ஒரு கட்டத்தில் கிராம சபை கூட்டம் முடிவுக்கு வந்த நிலையில் தேர்வாய் ஊராட்சி மன்ற தலைவரும் ஆளும் திமுகவின் மாவட்ட பிரதிநிதிமான தேர்வாய் முனிவேல் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவாகி பரவி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிஷன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!