பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.
X

ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது

ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி கிராம மக்கள் 10 கிமீ சுற்றி செல்ல வேண்டியிருப்பதால் மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்த நிலையில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆரணியின் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதே போல மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 2அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும் நிலையில் காவல்துறையினர் இந்த தரைப்பாலத்தின் முன் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.

போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10 கிமீ சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். சிலர் 2அடி உயர ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை பொருட்படுத்தாமல் நடந்து சென்று ஆற்றை கடக்கின்றனர். வடகிழக்குப் பருவமழை துவங்கியதில் இருந்து 3வது முறையாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாத நேரத்தில் தடுப்புகளை அகற்றி வாகனங்களை பொதுமக்கள் ஆற்று வெள்ளத்தில் ஓட்டி செல்கின்றனர். மேலும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்தும் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

ஆரணி ஆற்றில் மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்குவதால், ஆற்றின் குறுக்கே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்தப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்