பூண்டி ஒன்றிய துணைத் தலைவரின் கணவர் அலுவலக விவகாரங்களில் தலையீடு

பூண்டி ஒன்றிய துணைத் தலைவரின் கணவர் அலுவலக விவகாரங்களில் தலையீடு
X

பூண்டி ஊராட்சி ஒன்றிய விவகாரம் தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க வந்த முன்னாள் அமைச்சர் ரமணா

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவரின் கணவர் அலுவலக விவகாரங்களில் தலையிடுவதாக முன்னாள் அமைச்சர் ரமணா கலெக்டரிடம் புகார் அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு பெரும் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வெங்கட ரமணா என்பவர் இருந்து வருகிறார். ஒன்றியக்குழு துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மோதிலால் என்பவர் உள்ளார்.

இதனை அடுத்து, மகாலட்சுமியின் கணவர் மோதிலால், பூண்டி ஊராட்சிஒன்றிய அலுவலக செயல்பாடுகளில் தலையிடுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் ஆல்பி ஜான்வர்கீஸிடம், அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் பி.வி.ரமணா தெரிவித்துள்ளதாவது: பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் மகாலட்சுமியின் கணவர் மோதிலால், நாள்தோறும் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வருகிறார். அவர், வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் அமர்ந்து, 'நான்தான் ஒன்றியக் குழு துணைத் தலைவர், நாங்கள்தான் ஆளுங்கட்சி' என்று கூறி, அலுவலகத்தின் அனைத்து செயல்பாடுகளும் என் கவனத்துக்கு வரவேண்டும் என அனைத்து பணியாளர்களிடமும் கூறி வருவதாகவும்.

குறிப்பாக, மோதிலால், சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை இடித்து, அப்புறப்படுத்தும் பணிக்கான ஆணையை தனக்கு அறிமுகமான ஒப்பந்ததாரருக்கு வழங்க செய்து,அதற்கான கையூட்டு பணத்தையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே பெற்று வருவதாகவும்

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரின் அதிகாரிகளின் அனுமதியை பெறாமல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தேவைக்காக ஒரு லோடு பிளீச்சிங்பவுடரை வரவழைத்து, அதற்கான தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தர விடுவதகவும். அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் தரக்குறைவாக பேசி வருவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

பின்னர், பி.வி.ரமணா செய்தியாளர்களிடம் கூறும்போது, 'பூண்டிஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவரின் கணவர் மோதிலாலின் செயல்பாடுகளால் பூண்டி ஊராட்சிஒன்றியத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்கான ஆணை அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கோ, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கோ வழங்கப்படுவதில்லை.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வரும் 31-ம் தேதி பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்றார். இதில் வடக்கு மாவட்டஅதிமுக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!