அமைச்சர் வரும் நிகழ்ச்சியில் அவதிப்பட்ட பள்ளி மாணவர்கள்..! பெற்றோர் அதிருப்தி..!
ஹாக்கி கோப்பையை வரவேற்க வரிசையாக நிற்கவைக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர்கள்.
திருவள்ளூருக்கு வருகை புரிந்த ஹாக்கி கோப்பையை வரவேற்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் மாணவியர்கள் அமர வைக்கப்பட்டு அவதியடைந்தனர்.
ஏழாவது ஹீரோ ஆசிய ஆடவர் ஹாக்கி விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு திருவள்ளூர் ஆயில் மில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் ஹாக்கி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள வெற்றிக் கோப்பையை வரவேற்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் காந்தி, ஆட்சியர் ஆகியோர் வருவதற்கு முன்பு ஏராளமான அரசு பள்ளி மாணவர்களை காலை 11 மணி அளவில் சில மாணவர்களையும் 12 மணிக்கு மேல் சில மாணவர்களையும் அதிகாரிகள் வரவழைத்திருந்தனர். மாணவர்கள் அதிக அளவில் வரவழைக்கப்பட்டதால் மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் மாணவர்கள் அமர்வதற்கு இடமில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மண்டபத்தின் வெளியே சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்ட சூடு மிகுந்த தரையில் அமரவைக்கப்பட்டனர்.
மாணவர்கள் சூடான தரையில் அமர்ந்து வெயிலில் அவதியுற்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் காக்க வைக்கப்பட்டனர். இது குறித்து செய்தியாளர்கள் செய்தி சேகரித்தவுடன் உஷாரான அதிகாரிகள் வெயிலில் அமர வைத்த மாணவர்களை எழுப்பி மண்டபத்திற்குள் அனுப்பி வைத்தனர்.
இதை அடுத்து உள்ளே அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் கீழே இருந்த இருக்கைகளை மாணவர்களே எடுத்து வந்து போட்டு அமரும்படி ஆசிரியர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர். கீழ் தளத்தில் இருந்து முதல் மாடிக்கு இருக்கைகளை மாணவர்களே எடுத்துச் சென்று போட்டு அமர்ந்தனர்.
இதை அடுத்து ஆவடி பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை கோப்பையை வரவேற்பதற்காக கைகளில் மலர்களை கொடுத்து மெயின் கேட்டில் இருந்து மண்டப முகப்பு வரை இரு பக்கங்களிலும் நீண்ட வரிசையாக நிற்கவைத்திருந்தனர். சுமார் ஒன்றறை மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிற்க வைத்து இருந்ததால் மாணவர்கள் அவஸ்தைப்பட்டனர். அதையும் செய்தியாளர்கள் கவனித்து புகைப்படங்கள் எடுத்ததால் மீண்டும் அதிகாரிகள் மாணவர்களை நிழலில் சிறிது நேரம் அமரச் செய்தனர்.
இப்படி 12 மணி அளவில் வரவழைக்கப்பட்ட மாணவர்கள் சுமார் மூன்றரை மணி வரை வெயிலில் அமர்ந்து அவதிப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவ, மாணவியரை அரசு விழாக்களுக்கு கல்வி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றால் சரியான நேரத்துக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் விழாவில் கலந்துகொள்ளவேண்டும். இதில் மாணவர்களின் நலன் முக்கியம். ஹாக்கி குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த நினைத்தால் ஒரு பள்ளியில் விழா ஏற்பாடு செய்து அங்கு மாணவ, மாணவிகளை கலந்துகொள்ளச் செய்யலாம். அதைவிடுத்து, வெயிலில் பலமணிநேரங்கள் நிற்கவைத்து மாணவர்களை அவஸ்த்தைப்படுத்துவது ஏன்?
விளையாட்டு சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த எத்தனையோ வழி இருக்கும்போது இப்படி வெயிலில் நிற்கவைத்துத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டுமா? அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் விழாவுக்கு வர தாமதம் ஆகும் என்றால் முன்கூட்டியே அறிவிப்புச் செய்யவேண்டும். நமக்காக நம்மை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்கள் காத்திருப்பார்கள் என்ற உணர்வு எல்லோருக்கும் ஏற்படவேண்டும். நமது குழந்தைகளை வெயிலில் இப்படி நிற்கவைத்தால் நமக்கு நெஞ்சம் பதறாதா?
இன்னும் சொல்லப்போனால் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த விழாக்கள், விளையாட்டு விழாக்கள் போன்ற கல்விக்கு தேவைப்படும் அல்லது அவர்கள் பங்கேற்கும் அவசியம் இருந்தால் மட்டுமே பங்கேற்கச் செய்யவேண்டும். இதை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் அறிவிப்பாக வெளியிடவேண்டும்.
எப்போதுமே ஏதாவது ஒரு பாதிப்பு வந்தபின்னர்தான் அரசு அதிகாரிகள் அதில் அக்கறை காட்டுவார்கள். அலலது நீதிமன்றம் தலையிட்டு அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டினால் மட்டுமே அதைப்பற்றிய அக்கறை ஏற்படும். பாதிப்பு வராமல் தடுத்துக்கொள்ளும் வழிமுறைகளை கையாண்டு அதற்கேற்ப விழாக்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu