சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய் தீபம் ஏற்றினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த சிறப்பு வாய்ந்த சிறுவாபுரி கோவிலில் இன்று நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க கும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி ராஜ அலங்காரத்தில் வீற்றிருந்த பாலசுப்பிரமணிய சுவாமியை நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் இல.கணேசன்,' நாடு நன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக தான் சார்ந்துள்ள நாகலாந்து மக்கள் நலம் பெற வேண்டும். நாடு முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவித்தார். அரசியல் குறித்து பேசி 2 ஆண்டுகளாகி விட்டன; எனவும், அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும், சொல்லவும் விரும்பவும் இல்லை என்றார்.
தமிழக ஆளுநர் தமது நண்பர், நல்லவர், இதற்கு முன்னர் நாகலாந்தில் பணி புரிந்தவர். அந்த மக்கள் ஆர்.என்.ரவியை பாராட்டுகின்றனர் என்றார். ஆளுநர் செயல்பாடுகளுக்கு வரையறை உள்ளதா என்ற கேள்விக்கு, தெரியவில்லை. பார்க்க வேண்டும் எனவும், கடல் தண்ணீர் மேலே வராது என்ற நம்பிக்கையில கடற்கரையில் இருக்கிறோம் எனவும், அதற்கென வரம்புகள் உள்ளன, வரம்புப்படி நடந்தால் எல்லாமே நல்லா இருக்கும் என்றார்.
அரசியல் தொடர்பான செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால், 3 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்த பிறகு விரிவாக அரசியல் பேசுவோம் எனவும் ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார். நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சிறுவாபுரி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் வரை சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் கோவிலுக்குள் செல்லும் கதவுகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டு இருந்ததால், சாமி தரிசனத்திற்காக ஆலயத்தின் வெளியே 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu