தனியார் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு..!
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் கற்பி அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் வெங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், பாடப்பிரிவுகளில் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் மெடல் அணிவித்து,நினைவு பரிசு, ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும்,மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கும்,பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் காப்பாளர் வெங்கல் கோ.நீலன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன்,ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கரன்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பார்த்திபன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனிதாஸ்ரீபன் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும்,தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை இயக்குனர்கள் சங்க தலைவருமான கலை இயக்குனர் வெங்கல் கே.கதிர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
இதில்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,கல்வியாளர் முனைவர் விஜய் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயகுமார் தலைமை ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பதக்கங்களை வழங்கி நினைவு பரிசு மற்றும் ரொக்க பரிசை வழங்கிப் பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது: கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அவ்வாறு சிறப்பாக படித்ததால்தான் டாக்டர் அம்பேத்காரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித் தருமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டது. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் ஆவர். எனவே, தற்போது படிக்கும் மாணவர்கள் ஆகிய நீங்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், இன்ஜினியர்கள்,டாக்டர்கள் போன்று சிறந்த அரசியல்வாதியாகவும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசியல்வாதியாகவும் வர வேண்டும்.அப்பொழுதுதான் இந்தியாவை சமத்துவம், சமதர்மம்,சகோதரத்துவம் கொண்ட சிறந்த நாடாக கொண்டுவர முடியும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ்,ஓவியர் ஜி.டி.வேலுமயில்,மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தங்கம் முரளி,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வி.எம்.ரஜினி, பயர் சர்வீஸ் பரசுராமன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த மாவட்ட,ஒன்றிய,நகர,கிளைக் கழக நிர்வாகிகளும்,கட்சியின் பிரமுகர்களும்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரையும் அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் நீலக்கதிர் வரவேற்றார்.முடிவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கற்பி அறக்கட்டளையின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu