சாலை விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

சாலை விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
X

விபத்தில் உருக்குலைந்த வாகனம் 

பொன்னேரி அருகே லாரி முந்தி செல்ல முயன்ற கார் விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உயிரிழந்தார்

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் ரவிகுமார் உயிரிழந்தார்.அவரது மனைவியும் திண்டுக்கல் முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினருமான நிர்மலா படுகாயங்களுடன் சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொன்னேரி சட்ட மன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்( வயது 63). மணலிபுதுநகர் நாப்பாளையம் பகுதியை சேர்ந்த இவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். கடந்த 1991-96-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவின் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ரவிகுமார், திண்டுக்கல் தொகுதியில் அப்போதைய சட்ட மன்ற உறுப்பினரான நிர்மலாவை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், சென்னையில் மருத்துவம் பயின்று வரும் அவரது மகள் ரவீனா வார விடுமுறைக்காக ஊருக்கு வந்து விட்டு சென்னையில் உள்ள கல்லூரியில் தமது காரில் மனைவி நிர்மலாவுடன் சென்று மகளை விட்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வரும் போது மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் சீமாவரம் அருகே முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் கார் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு மீஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் ரவிக்குமார் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்து கொண்டதால் ரவிகுமாரே காரை ஓட்டி சென்ற போது விபத்து ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!