மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
தமிழ்நாடு அரசு கல்வியை மையமாகக் கொண்டிருக்கும் உலகத் தரத்திலான ஒரு அறிவு சூழல் அமைப்பாக 'தமிழ்நாடு அறிவுசார் நகரை' உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் அறிவுசார் தொழிலகங்கள் அனைத்தும் அருகருகே, நவீன நகரத்தில் அமைந்திருக்கும். பசுமையான வாழ்விட சூழலில் அடுத்த தலைமுறைக்கான புத்தாக்கத்தை உத்வேகத்துடன் ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்நகரம் அமையப்பட உள்ளது
மேலும் இந்த நகரில், உயிரின அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு, வான்வெளி மற்றும் பாதுகாப்பு, நகர்திறன், நிதி தொழில்நுட்பம், தொலைத்தொடர்புகள் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நகரம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைபட்டு, செங்காத்தா குளம், எர்ணாகுப்பம்,வெங்கல் உள்ளிட்ட ஆறு கிராமப்புறங்களை ஒருங்கிணைத்து அமையப்பட உள்ளது.
இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் அறிவுசார் நகரம் திட்டத்திற்காக நில அளவீடு பணி செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் மேற்கண்ட ஆறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாய மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலங்களை அழித்தால் நாளை சோற்றுக்கு வழியில்லாமல் போய்விடும் நிலை ஏற்படும் ஆகையால் இங்கே அறிவுசார் நகரம் அமைக்க கூடாது வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சென்று அறிவு சார் நகரத்தை அமைத்துக் கொடுங்கள் என பலமுறை இதற்கு முன்பிருந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்திருந்தனர்,
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமங்களில் நில அளவை செய்ய சென்றுள்ளனர், இதையொட்டி கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சம்பத் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளிக்கச் சென்றனர். அப்போது உள்ளே ஐந்து நபர்கள் மட்டும் வந்தால் போதும் என தடுத்து நிறுத்தி விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களை மட்டும் அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் உள்ளே செல்ல முடியாததால் ஆத்திரமடைந்த விவசாய சங்கம் மற்றும் கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து விட்டு வந்த விவசாயி சங்க முக்கியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியர் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் இந்த பிரச்சனை குறித்து பேசி உள்ளோம். விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என அறிவுறுத்திய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர் இச்ச சம்பவத்தால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu