தேர்தல் அலுவலகம் திறப்பு விழா..!
திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் பி வி ரமணா.
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் திமுக அரசின் கையாளாகாத தனத்தையும் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் பி வி ரமணா பேசினார்.
திருவள்ளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணி தேமுதிக சார்பில் நல்லதம்பி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எழுச்சி உரையாற்றியதால் வெற்றி கூட்டணியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது உறுதியானது.
இந்நிலையில் திருவள்ளூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கான தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா மற்றும் முன்னாள் எம்பி வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர். இதில் தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் ஜி.மகா, இ. குட்டி, சி.பி.குமார் மற்றும் தேமுதிக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பி வி ரமணா, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லதம்பி வெற்றி பெற ஒவ்வொரு நிர்வாகியும் வரும் 10 நாட்களில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளையும் திமுக அரசின் கையாலாகாத தனத்தையும் எடுத்து சொல்லி முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதே போல் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஒன்றாக களம் இறங்கி பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெற்று அதனை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu