சவுடு மண் குவாரியில் பணம் கேட்டு மிரட்டல் : பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கைது..!
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம்குமார். (கோப்பு படம்)
பெரியபாளையம் அருகே சவுடு மண் குவாரியில் பணம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரேம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பேடு கிராமத்தில் வண்டல் சவுடு மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த சவுடு மண் குவாரியை , பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த குவாரியில் கீழாநூர் கிராமத்தைச் சார்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம்குமார் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் குவாரிக்குச் சென்று, எங்களுக்கு இலவசமாக மண் கொடுக்க வேண்டும். மேலும் பணமும் கொடுக்க வேண்டும்' என்று என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் குவாரி நடத்த அனுமதி பெற்றவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கோதண்டன், பிரேம்குமார் என்பவர் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரியபாளையம் போலீசார் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பிரேம்குமாரின் மனைவி கீழானூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவரின் கணவரே இவ்வாறான அடாவடி வேலைகளில் ஈடுபடுவது அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இனிவரும் காலங்களில் மீண்டும் தலைவருக்கான தேர்தலில் நின்றால், மக்கள் எப்படி அந்த பெண்ணுக்கு வாக்களிப்பார்கள்?
மனைவி ஊராட்சிமன்ற தலைவர் என்கிற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால் வந்த விளைவு, அவருக்கு சிறைவாசம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு இந்த சம்பவம் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu