10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள் கைது
திருவள்ளூர் அருகே தனியார் நிர்வாகத்தை கண்டித்து கடந்த 10நாட்களாக இரவு, பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை கைது செய்த போலீஸார்
திருவள்ளூர் அருகே தனியார் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளை கண்டித்து கடந்த 10நாட்களாக இரவு, பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாகவும், 50க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் வைப்பதற்கான மேசை, நாற்காலி, அலங்கார பொருட்கள் உள்ளிட்ட மரச்சாமான்கள் தயாரிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்கள் கடந்த 10நாட்களாக இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பணப்பலன்களை வழங்கிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. நேற்று ஏஐடியுசி நிர்வாகிகள், காவல்துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சில கோரிக்கைகள் ஏற்பதாக கூறிய நிலையில் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் நல ஆணையரகத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தி இரவு அனைவரையும் விடுவித்தனர். தொழிலாளர் நல ஆணையரகத்தில் பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu