தொட்டுவிடும் தூரத்தில் மிரட்டும் அபாயம்..! நீர்த்தேக்க தொட்டியை அகற்ற மாணவர்கள் கோரிக்கை..!
இப்ப விழுமோ? எப்ப விழுமோ..என்ற அச்சத்தை ஏற்படுத்தும் மேல்நிலைத்தொட்டி.
குருவாயல் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆபத்தான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட குருவாயல் ஊராட்சியில் சுமார் 4. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாஷிகாபுரம், சேர்த்துப்பாக்கம், மாகரல், காரணிப்பேட்டை, அழிஞ்சிவாக்கம், தண்டு மேடு, அத்திவாக்கம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை நுழைவு வாயில் அருகே சுமார் 1லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆகிறது. இந்தத் தொட்டியில் சேமிக்கும் குடிநீரானது காலை,மாலை என இருவேளைகளில் குருவாயல் மக்களுக்கு குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பழைய நீர்த்தேக்க தொட்டி அருகில்தான் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை உள்ளது. தற்போது இந்த குடிநீர் தேக்க மேல்நிலைத் தொட்டியானது மிகவும் பழுதடைந்த நிலையில் மேல் உள்ள சிமெண்ட் கான்கிரீட்டுகள் உதிர்ந்து காணப்படுகின்றன. மேலும் அந்த தொட்டியைத் தாங்கும் தூண்களிலும் விரிசல்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் சரிந்து விழும் ஆபத்து உள்ளது.
அவ்வாறு ஒரு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அகற்ற வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் சார்பாக பலமுறை கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியும், கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த குடிநீர் தொட்டியானது சரிந்து கீழே விழுந்தால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகமும் பாதிக்கபப்டும். மக்கள் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் அவதியுறும் நிலை ஏற்படும். எனவே இந்த தொட்டி இருக்கும்போதே அருகில் அல்லது மாற்று இடத்தில் புதிய தொட்டியை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்?
பொதுவாகவே, ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டபின்னரே நமது அதிகாரிகள் பறந்து பறந்து பணிசெய்வார்கள். அந்த அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னரே திட்டமிட்டு பணியாற்றினால் மக்களின் பாராட்டு கிடிபபதுடன், அரசுக்கும் நல்லபெயர் கிடைக்கும். மேலும் இது பள்ளி மாணவர்கள் தொடர்புடைய கோரிக்கை என்பதால் உடனடி நடவடிக்கை எடுப்பது சிறப்பாக இருக்கும். வரும் முன் காப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu