தமிழக ஆளுநரை கண்டித்து பொன்னேரியில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்...
தமிழக ஆளுநரை கண்டித்து பொன்னேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
தமிழக சட்டப்பேரவை மரபுகளை மீறியதாக ஆளுநர் ஆர்.என். ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும் மாநிலம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து மூன்று இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணி சார்பில், அரசு கல்லூரி வாயிலில் ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், #GETOUTRAVI என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஆளுநரே வெளியேறு என முழக்கமிட்டனர்.
இதேபோல பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் சனாதன வகையில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியதை கண்டிக்கும் வகையில் ஆளுநரின் உருவ படத்தை மிதித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும், பொன்னேரி அண்ணாசிலை அருகே திமுகவினர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஒப்புதல் தராமலும், நீட் நுழைவு தேர்வு ரத்து சட்டத்திற்கு ஒப்புதல் தராமலும் தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளையும், சாதனைகளையும் எடுத்துரைக்க மறுத்த ஆளுநரை குடியரசுத் தலைவர் உடனே திரும்ப பெற வேண்டும் என்று ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu