பழவேற்காடு மீனவர்கள் மோதல் சம்பவம்.. மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு...

பழவேற்காடு மீனவர்கள் மோதல் சம்பவம்.. மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு...
X
பழவேற்காட்டில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீஸார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் எல்லை தகராறு தொடர்பாக கடந்த 7ஆம் தேதி இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில், கூனங்குப்பம் மீனவர்கள் தாக்கியதில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் 7பேர் காயமடைந்தனர். அவர்கள் 7 பேரும் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 12 கிராம மீனவ கூட்டமைப்பினர் கடந்த 9 ஆம் தேதி பழவேற்காடு பஜாரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும், மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து மீனவர்களும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதனால், சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்து வந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நடுவூர்மாதாகுப்பம் நிர்வாகி ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், வழி மறித்தல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் திருப்பாலைவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் மேலும் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கெனவே, தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!