பழவேற்காட்டில் மீனவர்கள் திடீர் சாலை மறியல்.. சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை...

பழவேற்காட்டில் மீனவர்கள் திடீர் சாலை மறியல்.. சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை...
X

பழவேற்காட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.

பழவேற்காட்டில் மீனவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த கூனங்குப்பம் மீனவர் கிராமத்திற்கும் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம், கோட்டைக்குப்பம் உள்ளிட்ட 12 கிராம மீனவர்களுக்கும் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் எல்லை தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. அண்மையில் மாவட்ட ஆட்சியர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட எல்லையில் மீன்பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் எல்லை தகராறு தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் தாக்கியதில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் 7 பேர் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் கூனங்குப்பம் மீனவர்கள் 64 பேர் மற்றும் பலர் மீது திருப்பாலைவனம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 7பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே, மீனவர்கள் மோதல் தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்கள் அனைவரையும் கைது செய்ய கோரி 12 கிராம மீனவ கூட்டமைப்பினர் பழவேற்காடு பஜாரில் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியரின் உத்தரவை மீறி பழவேற்காடு ஏரியில் தகராறில் ஈடுபட்டு தங்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலிலும் மீன்பிடி தொழிலை செய்து, ஏரியிலும் வந்து தங்களது வாழ்வாதாரத்தை கூனங்குப்பம் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

கூனங்குப்பம் மீனவர்கள் ஆயுதங்களால் தங்களது உறவினர்களை தாக்கியதால் 7பேர் படுகாயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர். வருவாய்த்துறையினர், காவல்துறையினர் தொடர்ந்து மீனவர்களை சமரசப்படுத்தும் வகையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது மீனவர்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், கடலில் மீன்பிடி தொழில் செய்யும் கூனங்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்களை விரைவில் கைது செய்வதாகவும், ஏரியில் மீன்பிடிப்பதை தடை செய்வது குறித்து கலந்தோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா மீனவர்களிடம் உறுதியளித்தார். சார் ஆட்சியரின் உத்தரவாதத்தை தொடர்ந்து 4 மணி நேரமாக மேற்கொண்ட சாலை மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர். இருப்பினும், பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸீார் பழவேற்காட்டில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil