மின்விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

மின்விநியோகம் செய்ய வலியுறுத்தி  பொதுமக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

பொன்னேரி சின்னக்காவனம் பகுதியில் மின்நினியோகம் செய்ய வேண்டிய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் சுமார் 30.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சிக்குட்பட்ட சின்னக்காவனம் என்ற பகுதியில் கனமழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக மின்வினியோகம் தடைபட்டது.

இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடி தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து மழை நின்று நான்கு நாட்கள் ஆகியும் இன்றுவரை மின்விநியோகம் ஏன் தரவில்லை என்று மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை கேட்டும், புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பொன்னேரி - பழவேற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமராச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் மழை நின்று நான்கு நாட்கள் ஆகியும் தற்போது வரை தாங்கள் பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும், குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் கூடுதல் விலைக்கு தண்ணீர் கேன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இதுகுறித்து அதிகாரியிடம் எடுத்துச் சென்று கூறிய போது கண்டுகொள்ளாமல் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மின்சாரம் இல்லாத காரணத்தினால் வயதான முதியோர்கள், குழந்தைகள் மிகவும் இன்னலுக்கு ஆளாவதாகவும், இது மட்டுமல்லாமல் சாலையில் தேங்கி நிற்கின்ற மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும், கூறினர்.

எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்தில் மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil