மின் கம்பம் உடைந்து பெண் மற்றும் குழந்தை மீது விழுந்தது..! பொதுமக்கள் சாலை மறியல்..!
உடைந்து விழுந்து மின்கம்பம்.
மீஞ்சூரில் வீட்டின் முன் அமர்ந்திருந்த பெண் மற்றும் குழந்தை மீது மின் கம்பம் உடைந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு ஜெகஜீவிராமன் நகர் பகுதியில் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதே பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி லாவண்யா(32). இவரும்,உறவினரான கார்த்திக் என்பவரது நான்கு வயது மகள் சிட்டு என்ற குழந்தையுடன், நேற்று மதியம் 2.00மணி அளவில் வீட்டின் அருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது இவர்களுக்கு எதிர்ப்புறத்தில் இருந்த மின்கம்பம் ஒன்று திடீரென உடைந்து இருவரின் மீதும் விழுந்ததாக தெரிகிறது.
அந்த மின் கம்பத்தில் உள்ள கம்பிகளில் மின் சப்ளை இருந்துள்ளது. கீழே விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது. மின்கம்பம் விழுந்ததில் லாவண்யாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டு அலறினார். குழந்தை சிட்டு அதே இடத்தில் மயக்கமடைந்து விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும்,மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மின் கம்பம் உடைந்த பொழுது உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டி அப்பகுதியில் வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காட்டூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மீஞ்சூர் காவல் நிலைய போலீசார் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், வார்டு உறுப்பினர் தன்ராஜ், உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் மீஞ்சூர் பேரூராட்சி பல வார்டுகளிலும், தங்கள் பகுதிகளிலும் இருப்பதாகவும், பழைய மின்கம்பங்கள் என்பதால் சற்று லேசாக காற்று அடித்தாலும் மழை பெய்தாலும் சாய்ந்து விழும் இதே நிலைமை பலமுறை நீடித்ததாகவும், இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணும் குழந்தையும் உயிர் தப்பி உள்ளனர். ஒருவேளை விபரீதம் ஏற்பட்டிருந்தால் என்ன செய்யமுடியும் என்று கேள்வி எழுப்பிய மக்கள், மறுபடியும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
இந்த பகுதியில் பழையதாக உள்ள அனைத்துக் கம்பங்களையும் மாற்றி புதிய கம்பங்களை நட்டு அனைத்தையும் சீர் செய்து தருவதாக உறுதியளித்தின் பேரில், அனைவரும் களைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu