இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி..!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பேரிடர் மீட்பு  ஒத்திகை நிகழ்ச்சி..!
X

பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி.

அத்திப்பட்டு ஊராட்சி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பேரிடர் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் பேரிடர் மீட்பு தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கிய பொதுமக்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று சென்னை உள்ளிட்ட 6மாவட்டங்களில் நடைபெற்றது. ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பாதுகாப்பு தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாதிப்பு ஏற்பட்டால் எவ்வாறு தொழிலாளர்களை வெளியேற்றுவது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொழிற்சாலைக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து மாடிகளில் இறங்க முடியாமல் சிக்கி கொண்ட தொழிலாளர்களை ஏணி உதவியுடன் பாதுகாப்புடன் இறக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஆங்காங்கே சிக்கிக் கொண்ட தொழிலாளர்களையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக இருகைகளால் தாங்கியபடி அழைத்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு சாதனங்களின் பயன்பாடு குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கங்களை அளித்தனர்.

இதில் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் ஏற்பாட்டில் இந்தியன் ஆயில் நிறுவன துணை மேலாளர் கண்ணன், பொன்னேரி ஆதிதிராவிட நல தாசில்தார் சித்ரா, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், குமார், புழல் சித்ரா, மீஞ்சூர் அரசு தலைமை மருத்துவர் முகமதுஉசேன், அத்திப்பட்டு மருத்துவர் சுரேஷ், அப்துல்லாஹ் ,மீஞ்சூர் வருவாய் ஆய்வாளர் அருணாசலம், மற்றும் பொதுப்பணி துறை, கால்நடை துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய்துறை, காவல் துறை, மற்றும் வார்டு உறுப்பினர் கோமதிநாயகம், ஊராட்சி செயலர்கள் பொற்கொடி, ஆனந்தன், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story