சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
X
அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோழவரம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள குமரன் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். குமரன் நகர் பகுதியில் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாகவே சரியாக குடிநீர் வருவதில்லை என புகார் எழுந்தது.

மேலும், அந்தப் பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது என்றும் கூறி பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி உன்னிகிருஷ்ணனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்காத பொதுமக்கள் உடனடியாக தாங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்தால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.

பின்னர் இந்த பிரச்சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுத்தி அளித்தனர். அப்போது, அதிகாரிகளிடம் பேசிய பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் மக்களை திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

சமரசத்துக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Tags

Next Story