பெரியபாளையம் அருகே ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பதாக கூறி இன்று வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வில் ஒரே நாளில் தங்களது பள்ளியில் இருந்து 8ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாக தெரிவித்தனர். 11 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ள நிலையில் 2ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் இருப்பதாகவும், அவர்களே அனைத்து வகுப்புகளையும் எடுத்து வருவதாக குற்றம் சாட்டினர். 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் உடனடியாக அனைத்து பாடங்களுக்கும் தேவையான அளவு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் பள்ளியின் கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் புதர்மண்டி கிடப்பதால் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மாளந்தூர் கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் வெளியூரிலிருந்து இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வர மறுப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு உடனடியாக பள்ளி நேரத்தில் போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும், தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை டிஎஸ்பி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது 4ஆசிரியர்கள் பள்ளிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu