பெரியபாளையத்தில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை
ஆபத்தான நிலையில் உள்ள மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உள்பட்ட எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த தொட்டியில் இருந்து தான் பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள குடியிருப்புகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள், கல்வி நிலையங்களுக்கு பைப்புகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 38 ஆண்டுகள் ஆகிய நிலையில் 2014-15 ஆம் ஆண்டு ரூபாய் 94 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டியில் சில பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியவிட்டதால் இந்தத் தொட்டியை தாங்கி பிடிக்கும் தூண்கள் மிகவும் பலவீனமடைந்து கான்கிரீட் விரிசல் ஏற்பட்டு அதிலுள்ள சிமெண்ட் பூசுகள் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலையில் உள்ளது. பேருந்து நிலையம் பகுதியில் கடைகள், ஓட்டல்கள் அதிக அளவில் உள்ளதால் அனைத்து நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் தூண்கள் உடைந்து சரிந்து கீழே விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்த அந்த பகுதி மக்கள் கூறுகையில், "38 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஊராட்சி ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மட்டும் தான் செய்து வருகின்றனர். எத்தனை ஆண்டு காலம் இந்த தொட்டி பலமாக இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழுந்தால் ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திலும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் தற்போது வரை அதிகாரிகள் அலட்சிய போக்கால் இதனை கண்டு கொள்ளவில்லை. மேலும் இந்த தொட்டியானது பழுதடைந்து விழுந்தால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறுவதற்கு முன்பே இந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை கட்டி தர வேண்டும்" என பெரியபாளையம் பஜார் பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu