புதிய ரத்த பரிசோதனை ஆய்வகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரத்த பரிசோதனை ஆய்வகம்
பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரத்த பரிசோதனை ஆய்வகத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊரைச்சுற்றி ஆத்துப்பாக்கம், அரியப்பாக்ககம், தண்டுமாநகர், ராள்ளபாடி, வடமதுரை, செங்காத்தா குளம், 82 பனப்பாக்கம், பேட்டை மேடு, குமார பேட்டை என 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது .
இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது பிரசவத்திற்கோ பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சர்க்கரை நோய், காய்ச்சல், சளி, நாய் கடி உள்ளிட்டவைக்கு சிகிச்சை பெறுவார்கள். அவ்வாறு வரும் நோயாளிகள் ரத்த பரிசோதனை செய்ய வெளியே உள்ள தனியார் ரத்த வங்கிகளில் அதிக பணம் செலுத்தி பரிசோதனை செய்து வந்தனர்.
அதனால் ரத்தம் பரிசோதனை செய்ய புதிதாக இதன் அருகில் வட்டார பொது சுகாதார ஆய்வகம் ₹ 50 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதன் பணிகள் முடிந்து ஒரு 4 மாதம் ஆகிய நிலையில் தற்போது வரை இந்த ஆய்வகம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. விரைவில் இந்த ரத்த பரிசோதனை ஆய்வகத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, பெரியபாளையம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ₹ 50 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாதத்திற்கு மேல் ஆகிறது. மேலும் இரவு நேரங்களில் கஞ்சா, சூதாட்டம், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே விரைவில் ஆய்வகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu