தமிழகத்தில் பொது நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு தேவை இல்லை என அமைச்சர் தகவல்
கும்மிடிப்பூண்டியில் புதிய மருத்துவமனையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் புதியதாக கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்பெல்லாம் சாலை விபத்துக்கள் நடந்தால் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயக்கம் காட்டி வந்ததாகவும், போலீஸ், நீதிமன்றம் செல்ல வேண்டும் என்பதால் இரக்க குணம் கொண்டவர்கள் கூட அதனை கடந்து சென்றதாக தெரிவித்த அவர் தற்போது தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பவருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக 5000ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இன்னுயிர் திட்டம் செயல்படுத்த தொடங்கியதில் இருந்து இதுவரையில் 91086பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் அரசின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து 82 கோடி 37லட்ச ரூபாய் சிகிச்சைக்காக செலவிடப்பட்டுள்ளது என்றார்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தால் தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 80சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய சுகாதார துறை அமைச்சர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் செயல்பாடுகளை வியந்து பாராட்டியதாக கூறினார். இந்தியா மட்டுமல்லாது இந்த திட்டத்தை பற்றி உலகளவில் தெரிந்து கொள்ளும் வகையில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை எடுத்துரைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். உலகளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ கட்டமைப்புகளில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை பிரிவு அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு மருத்துவமனைகளில் கலைஞர் உணவகம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல தமிழ்நாட்டில் 500கலைஞர் உணவகங்கள் ஏற்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். புதிய மருத்துவமனைகள் ஏற்படுத்துவது குறித்து வழிமுறைகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒரு ஒன்றியத்திற்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் என 381 நடமாடும் வாகனங்கள் மூலம் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பிஏ4, பிஏ5 என உருமாறிய வைரஸ் 110நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் நாளொன்றுக்கு 2000 முதல் 2500 என்ற அளவில் கடந்த 10நாட்களாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது எனவும் இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தற்போதைய சூழலில் பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க தேவை இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu