தென் இந்திய அளவிலான யோகா போட்டியில் அரசுப்பள்ளி மாணவி சாம்பியன்..!
சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டம் வென்ற காரைக்கால் காமராஜர் அரசினர் நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி லலிதாம்பிகை.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 17 ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டியில் அரசு பள்ளி மாணவி சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், கைரளி யோகா வித்யா பீடம் சார்பில், 17ம் ஆண்டு, தென் இந்திய யோகாசன போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய பல மாநிலங்களைச் சேர்ந்த 560 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
வயது வாரியாக, 10 பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனியே யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களுடன் கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இறுதியாக ஆண் மற்றும் பெண்கள் பிரிவினர் இடையே நடைபெற்ற சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில்
காரைக்கால் காமராஜர் அரசினர் நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி என்.லலிதாம்பிகை (11) சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் ஆண்கள் பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் ஜெ.நகுலன் (12) சாம்பியன் பட்டம் வென்றார்.
விழாவில், சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி ரமேஷ், அரசு மருத்துவர் கோவிந்தராஜ், தொழிலதிபர் கிளமண்ட், கைரளி யோகா வித்யா பீடத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கி சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu