அதிகரித்து வரும் கஞ்சா விற்பனை: ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

அதிகரித்து வரும்  கஞ்சா விற்பனை:  ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
X

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

கும்மிடிப்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக, ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமையிலும், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு 2021-2022 ஆம் ஆண்டுக்கான 15வது நிதிக்குழு மான்யத்தின் படி ஒரு கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 678 ரூபாய்க்கு பல்வேறு பணிகள் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது .

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் பேசுகையில் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, கெட்ணமல்லி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து இயக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் நடப்பதில்லை என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் புகார் கூறினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் தெரிவிக்கையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கூட்டி கும்மிடிப்பூண்டியில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடம் குறித்த விவரம் சேகரிக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த கட்டடங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் பாமக கவுன்சிலர் சங்கர் ஆகியோர் கும்மிடிப்பூண்டி சிப்காட், பெத்திகுப்பம், கண்ணன்கோட்டை,ஈகுவார் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் போலீசார் இதனை தடுக்க தவறி வருவதாக குற்றம் சாட்டியது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்ட நிறைவில் பேசிய, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே. எம். எஸ்.சிவகுமார் ஒன்றிய கவுன்சிலர்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil