மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டோரை தீயணைப்பு வீரர்கள் படகில் மீட்பு..!
படகில் மீட்கப்படும் மக்கள்.
செங்குன்றம் அருகே குமரன் நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்திருக்கும் நிலையில் 50-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் அழைத்து வந்தனர். அவர்களில் சிலர் உறவினர்கள் வீடுகளுக்கும் சிலர் முகாமிற்கும் சென்றனர்.
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டிய நிலையில் சோழவரத்தில் 30 சென்டிமீட்டர், செங்குன்றத்தில் 28 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. பரவலாக நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த குமரன் நகர் பகுதியில் மழைநீர் வீடுகளை முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். பால், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி வீடுகளில் முடங்கி இருந்த சூழலில் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
விட்டு விட்டு மிதமான சாரல் மழையும் பெய்து வந்த சூழலில் இடுப்பளவு தண்ணீரில் வீடுகளில் முடங்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் படகில் சென்று மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ரப்பர் படகுகள் மூலம் வெளியே வந்து அவர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். ஒரு சிலர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்றனர். குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu