பேருந்தில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்.. கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கைது…

பேருந்தில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்.. கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கைது…
X

கும்மிடிப்பூண்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைதானவர்கள்.

கும்மிடிப்பூண்டி அருகே போலீஸார் மேற்கொண்ட சோதனையின்போது, பேருந்தில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் ஜெப தாஸ் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சென்னை நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்தை மடக்கி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பேருந்தில் பயணம் செய்த 3 பேரிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும், மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (30), மதுரை சேர்ந்த வேல்முருகன் (29), சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த கமல்குமார் (32) என்பதும் தெரியவந்தது.

பின்பு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் மூன்று பேரையும், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், போலீஸார் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு போதைப் பொருட்களை கடத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப் பொருட்கள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற கடத்தல் செயல்களை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai products for business