பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
X

கடும் போக்குவரத்த்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு படையெடுத்து வந்த பக்தர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் தொடங்கி 4 வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தாண்டு தற்போது வரையில் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த எந்த தடையுமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பெரியபாளையம் கோவிலுக்கு வந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 5கிமீ தூரம் இரண்டு பக்கங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் இருந்து பெரியபாளையம் வழியாக திருப்பதி செல்லும் சாலையில் பெரியபாளையம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாகவும், புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு